கும்பகோணம் அருகே நண்பர்களை வீட்டுக்கு அழைத்துச்சென்று கொலை செய்து புதைத்த நாட்டு வைத்தியரை கைது செய்த போலீசார், வீட்டுக்குள் புதைக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை தோண்டி எடுத்தனர்.
கும்பகோணம் அருகே சோழபுரம் மணல் மேடு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ். 27 வயதான இவர் கடந்த 13 11 23 அன்று வீட்டிலிருந்து சிதம்பரத்தில் நடைபெறும் நண்பர் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பாததால் அசோக் ராஜின் பாட்டி பத்மினி என்பவர் 2 நாட்களுக்குப் பிறகு சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர், அசோக்ராஜின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது, செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதையடுத்து, அசோக்ராஜ் சென்று வந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் கடைசியாக சோழபுரம் அருகே உள்ள கீழ வீதிக்கு சென்றிருப்பது தெரியவந்தது.
அங்கு வசிக்கும் அசோக்ராஜிற்கு நெருங்கிய நண்பரான நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி என்பவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், அசோக்ராஜை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்ததாக ஒப்புக்கொண்டார்.
இதை அடுத்து அங்கு தடயவியில் ஆய்வுத்துறை உதவி இயக்குனர் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் வந்தனர். மோப்பநாய் சோழாவும் வரவழைக்கப்பட்டது. திருவிடைமருதூர் டிஎஸ்பி சித்திக் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் முன்னிலையில் வருவாய் துறையினரும் அங்கு வந்தனர்.
புதைக்கப்பட்ட அசோக்ராஜ் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. தோண்டி எடுக்கும்போது தலை தனியாகவும், உடல் தனியாகவும் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
உடல் புதைக்கப்பட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் உடல் உருக்குலைந்து இருந்ததால் சம்பவ இடத்திலேயே டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர்
உடற்கூராய்வுக்கு பின்னர் அசோக் ராஜின் சடலத்தை உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இதேபோன்று சோழபுரம் பகுதியை சேர்ந்த அனாஸ் என்ற நபர் கடந்த 2021ஆம் ஆண்டு காணவில்லை என்று காவல்துறையில் புகார் ஒன்று நிலுவையில் உள்ளது.
மாயமான அனாசும் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.
2 ஆண்டுகள் ஆகியும் அனாஸ் கிடைக்காததால், அவரையும் கேசவராஜ் கொன்று புதைத்தாரா? என்ற கோணத்தில் கேசவமூர்த்தியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சோழபுரம் பகுதியில் நாட்டு மருந்து கொடுக்கும் வைத்தியராக வலம் வந்த கேசவ மூர்த்தி பெண்களிடம் பேசுவதை அதிகம் விரும்ப மாட்டார் என்றும் ஆண்களிடம் மட்டுமே அதிகம் பேசுவார் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கேசவமூர்த்தியுடன் உடன்பிறந்தவர்கள் 3 பேர் இருந்தும் அவர்களிடமிருந்து பிரிந்து தனிமையில் வாழ்ந்துள்ளார். இவருக்கு 2 முறை திருமணம் நடந்து போதும் இரு மனைவிகளும் பிரிந்து சென்ற நிலையில் கேசவமூர்த்தி சிங்கிளாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது
ஆண் நண்பர்களை என்ன காரணத்திற்காக வைத்தியர் கொலை செய்தார் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.